தமிழக சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த அவரது உரையின்போது, ‘எதை பேசினாலும் நாங்கள் மிசாவை பார்த்தவர்கள் என்று கூறுகிறார்கள். அனைவருக்கும் மிசா வரலாறு தெரியும்’ என்று குறிப்பிட்டதுடன், அதுதொடர்பான செய்கையையும் அவர் வெளிப்படுத்தினார். முதல்-அமைச்சர் விஜயின் இந்த உடல்மொழி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்வது போல் இருப்பதாகக் கூறி, தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். மு.க.ஸ்டாலினின் மிசா கால தியாகத்தை விஜய் தனது செய்கை மற்றும் உடல்மொழி மூலம் கொச்சைப்படுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து விஜய் விளக்கம் அளித்தார். கடந்த 7-ந்தேதி சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்தபோது, தனது உரையின் இடையே வெளிப்பட்ட உடல்மொழி தற்செயலானது என்றும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், மிசா காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில், தவெக ஐ.டி.
Advertisement
விங் சார்பில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘சிறை சென்ற தியாகி’ என்ற பிம்பம் உடைந்துவிட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதா? என மு.க.ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், ‘மஞ்சள் துண்டு தந்தை’ முதல் ‘ஆபாசநதி மகன்’ வரை பாதுகாத்ததாகக் கூறப்படும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததால் அச்சம் அதிகரித்துள்ளதாகவும் அந்தப் பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் பேசியபோதிலும், ‘detention copy’ குறித்து மட்டும் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தவெக ஐ.டி. விங் கூறியுள்ளது. உண்மைக்கு விளம்பரமோ விளக்கமோ தேவையில்லை என்றும், அதே நேரத்தில் ‘shooting video’ வெளியாகியிருப்பது போலி பிம்பம் உடைந்ததற்கான ஆதாரமாக இருப்பதாகவும் அந்தப் பதிவு தெரிவித்துள்ளது. மேலும், பல இடங்களில் வெட்டப்பட்ட காட்சிகள், உணர்வற்ற பேச்சு மற்றும் மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி என அந்த வீடியோவை தவெக ஐ.டி. விங் விமர்சித்துள்ளது. கதைகள் மற்றும் கட்டுக்கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் பிம்பம், உண்மையின் முன் நிலைக்காது என்பதை இன்று வெளியான வீடியோ மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.