பெல்ஜியத்தில் வீட்டைப் புதுப்பித்தபோது சிக்கிய தங்கப் புதையல்: மதிப்பு ரூ.98 கோடி
பெல்ஜியத்தில் வீடு ஒன்றை புதுப்பிக்கும் பணியின்போது, அடித்தளச் சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் உள்ள அந்த வீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் புதிய கழிவுநீர் குழாய்களை அமைப்பதற்காக, அடித்தள அறையின் சுவரில் தொழிலாளர்கள் துளையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிய தங்க நாணயங்களும், 50 பெரிய தங்கக் கட்டிகளும் அவர்களிடம் சிக்கின.இந்தப் புதையலின் மதிப்பு சுமார் 1 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.98 கோடி ஆகும்.தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் புதையலை கைப்பற்றி பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, புதையலை தேடும் நோக்கில் கட்டுமானப் பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என உள்ளூர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அந்த இடம் முழுமையாக சோதனை செய்யப்பட்டு, கண்டெடுக்கப்பட்ட தங்கம் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.பெல்ஜிய சட்டப்படி, இந்தப் புதையலின் உண்மையான உரிமையாளர் அதை உரிமை கோருவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் உள்ளது. அதேநேரத்தில், புதையலை கண்டுபிடித்த கட்டுமான நிறுவனமும், அந்த வீட்டின் உரிமையாளரான உள்ளூர் தொண்டு நிறுவனமும் அதற்கு உரிமை கோர வாய்ப்புள்ளது.புதையலின் உண்மையான உரிமையாளர் யார் என்பது இதுவரை தெரியவில்லை என்று விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். யாரும் உரிமை கோராத நிலையில் அல்லது உரிய உரிமையாளர் கண்டறியப்படாத பட்சத்தில், சட்ட விதிகளின்படி புதையலை கண்டுபிடித்தவர்களுக்கும் சொத்தின் உரிமையாளருக்கும் அது சமமாகப் பகிர்ந்தளிக்கப்படலாம்.எனினும், இந்தப் புதையலுக்கும் எந்தவொரு குற்றச் செயலுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் பகிர்வு விதி நடைமுறைக்கு வரும்.