புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணிக்காக இடங்களை அமைச்சர் கீர்த்தனா நேரில் ஆய்வு
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணிக்காக இரண்டு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் நடவடிக்கையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.பட்டாசு தொழிற்சாலைகள் அதிகமாக செயல்படும் பகுதிகளில் நிலவும் அபாய சூழல், அப்பகுதியின் மக்கள் அடர்த்தி மற்றும் எதிர்கால தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தீயணைப்பு நிலையம் அமைக்க மிகவும் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்வதே இந்த ஆய்வின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.மேலும், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தனது முக்கிய பொறுப்பு என்றும், அதற்காக புதிய தீயணைப்பு நிலையம் விரைவில் அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.மக்களிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் நடைமுறைச் செயல்களாக மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், மக்கள் நலனும் பாதுகாப்பும் தொடர்ந்து முன்னுரிமை பெறும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.