பாஜகவும், காங்கிரசும் ஒன்றுதான்; இரு கட்சிகளிடமும் ஒரே ஜீன் தான் உள்ளது - சி.வி.சண்முகம் கடும் விமர்சனம்
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நீட் தேர்வு தொடர்பாக பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட், 2011-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு தேவையில்லை எனக் கருதிய மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக கூறினார்.இதற்கு பதிலளித்த பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன், நீட் தேர்வை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என்பதை இத்தனை ஆண்டுகளாக அக்கட்சி ஒப்புக்கொள்ளவில்லை என்றும், தற்போது அதை ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய தாரகை கத்பட், மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தியதாகவும், மற்ற திட்டங்களில் மாற்றங்கள் செய்வதைப் போல நீட் தேர்விலும் திருத்தங்களை மேற்கொண்டு விலக்கு வழங்க முடியும் என்றும் கூறினார்.இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏ.
சி.வி.சண்முகம் பேசுகையில், “நீட் தேர்வை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என்று காங்கிரஸ் தரப்பும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படியே நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று பாஜக தரப்பும் கூறுகின்றன. இரு கட்சிகளும் வேறுபட்டதாக தெரிந்தாலும், அவற்றின் உடலில் ஓடுவது ஒரே ஜீன் தான்” என்று கடுமையாக விமர்சித்தார்.மேலும், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார்.மாணவர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்றும் சி.வி.சண்முகம் கூறினார். ஆனால் பாஜகவும், காங்கிரசும் நீட் தேர்வு விவகாரத்தை அரசியலுக்காக பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.