தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பாலும், பாட்டி கதாபாத்திரங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியும் ரசிகர்களிடம் புகழ்பெற்றவர் நடிகை வத்சலா ராஜகோபால் (93). வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று அவர் காலமானார். நாடக மேடைகளில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய வத்சலா ராஜகோபால், பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்தவர். தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் தனி அடையாளம் பெற்ற இவர், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 'சதி லீலாவதி', 'திருடா திருடி', 'காலமெல்லாம் காதல் வாழ்க', 'அந்நியன்', 'ரிதம்', 'மொழி', 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
Advertisement
திரைப்படங்கள் மட்டுமின்றி 'சித்தி', 'ஆனந்தம்', 'முந்தானை முடிச்சு' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். வத்சலா ராஜகோபாலின் மறைவு செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் பதிவு செய்து வருகின்றனர். அவரது உடல் பல்லாவரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.