பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; இல்லையெனில் மாநிலம் முழுவதும் போராட்டம் – எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் த.வெ.க.–காங்கிரஸ் கூட்டணி அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலுக்கு முன் த.வெ.க. வெளியிட்ட அறிவிப்பில், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் கொண்டவர்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கே முழு தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அரசு அறிவித்திருப்பது தேர்தல் வாக்குறுதிக்கு முரணானதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இந்த அறிவிப்பை எதிர்த்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், அது நடைபெறாவிட்டால் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.காவிரி நீர் பகிர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. நீர் வழங்கப்பட வேண்டிய நிலையில், கர்நாடக அரசு 2.91 டி.எம்.சி. மட்டுமே திறந்ததாகவும், ஜூலை மாதத்திற்கான ஒதுக்கீடு 31.24 டி.எம்.சி. என்றாலும் அதற்கான நீரும் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.இந்த விவகாரம் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) கூட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று குழு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடக முதல்-மந்திரி மறுத்திருப்பதுடன், இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.