நேபாளத்தில் பனிப்பாறை தொடர்பான பேரழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளம் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள பனிப்பாறை ஏரிகள் மீதான கவனம் அதிகரித்துள்ளது. 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் சிக்கிமில் உள்ளன. அவற்றில் 40 ஏரிகள் அபாய நிலையில் இருப்பதாகவும், 16 ஏரிகள் அதிக ஆபத்துக்குரியவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கண்காணிப்பு பணிகள், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் மற்றும் பேரிடர் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.நேபாளத்தில் பனிப்பாறை ஏரி வெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், சிக்கிமில் பனிப்பாறை ஏரிகளால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயம் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சிக்கிமில் உள்ள 40 பனிப்பாறை ஏரிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. அவற்றில் 7 ஏரிகள் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. முன்னுரிமை அளித்து கண்காணிக்கப்படும் 16 ஏரிகளில், 13 ஏரிகள் தொடர்பாக விரிவான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஏரிகளில் பெரும்பாலானவை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ளன.
Advertisement
ஏரிகளின் ஆழம், நீளம், நீரின் அளவு, பனிப்பாறைகளின் தன்மை மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அபாயத்தைக் குறைக்கும் வகையில் ஆபத்தான ஏரிகளில் நீர்மட்டத்தை குறைக்க சிக்கிம் அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.இதுகுறித்து சிக்கிம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளர் சந்தீப் தாம்பே கூறுகையில், அபாயகரமானதாக அடையாளம் காணப்பட்ட 16 ஏரிகளில் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முன்னெச்சரிக்கை அமைப்புகளை விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.ஷாகோ சூ, கெராங் மற்றும் டோல்மா சம்பாங் பகுதிகளில் தானியங்கி கண்காணிப்பு நிலையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, பனிச்சரிவு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களை ஏற்படுத்தக்கூடிய வானிலை மாற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக டாப்ளர் வானிலை ரேடார்களை நிறுவுவதற்கான இடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.