திருநெல்வேலி மாநகரில் புதிய பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலபிரசாத் (30) என்பவர், திருநெல்வேலி மாநகரில் புதிய பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாகச் செயல்பட்டு, அவரைப் பிடித்தனர். பின்னர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். இதையடுத்து, மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பாலபிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
Advertisement
போலீசாருக்கு ஆணையர் பாராட்டு இந்தச் சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட திருநெல்வேலி மாநகர ஏட்டு ராதிகா, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் ராஜபாளையம் 11-வது அணியைச் சேர்ந்த முதல் நிலைக் காவலர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் அஜய், முரளி, முத்து, பழனிராஜ், மாதவன் ஆகியோரின் பணியை மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பாராட்டினார். இதற்காக காவலர்களை நேரில் அழைத்த அவர், பாராட்டுச் சான்றிதழ்களையும் வெகுமதியையும் வழங்கினார். இந்நிகழ்வின்போது, கிழக்கு துணைக் காவல் ஆணையர் சரவணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.