நடிகை பிரியா வாரியரிடம் ரசிகர் ஒருவர், “நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த பிரியா வாரியர், “எனக்கு எப்போது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் நீங்கள் ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்? நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்!” என சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் நடிகை பிரியா வாரியர். மோகினியாட்டக் கலைஞரான இவர், 2017-ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான ‘ஒரு அடார் லவ்’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற கண் சிமிட்டும் காட்சியின் மூலம் ஒரே இரவில் இந்திய அளவில் பிரபலமானார். அதன்பிறகு மலையாளம் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் பிரியா வாரியர் நடித்துள்ளார். தமிழில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘குட் பேட் அக்லி’, ‘சர்வம் மாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
Advertisement
‘குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு பிரியா வாரியர் நடனமாடிய காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகின. இதனிடையே, அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாக உள்ள ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் பிரியா வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர், அவ்வப்போது தனது புகைப்படங்களைப் பகிர்வதுடன், ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, “நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்” என அவர் அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.