நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், கார்த்திகா மற்றும் அவரது கட்சியினரை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், அண்மையில் நடைபெற்ற தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கை அடிப்படையாகக் கொண்டு கார்த்திகாவை த.வெ.க. அரசு கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் அரசியலிலும் பொதுவாழ்விலும் ஈடுபடுவதை, அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஊக்குவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், கைது நடவடிக்கைகள் மூலம் அவர்களை அச்சுறுத்துவது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கார்த்திகா கடந்த காலங்களில் திமுகவையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சித்தபோதுகூட, கருத்துகளுக்கு கருத்துகள் மூலமாகவே பதிலளிக்க வேண்டும் என்ற அணுகுமுறையைத் திமுக பின்பற்றியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து அவர்களின் குரலை முடக்குவது தங்களது நோக்கமாக இருந்ததில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், தற்போதைய த.வெ.க. அரசு சகிப்புத்தன்மையும் ஜனநாயகப் பண்புகளும் இன்றி செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார். இடைத்தேர்தலின்போது அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், அதற்கு எதிராகக் குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
ஜாமீனில் வெளிவரக்கூடிய சாதாரண வழக்குகளுக்காகக் கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் கண்டனத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குக் காவல்துறையினர் துணைபோகக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகி ஒருவரும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், அரசின் நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் கார்த்திகா மீதான கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளையில், செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்கள் த.வெ.க.வில் இருப்பதன் காரணமாகவே அவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுவதாகவும் அவர் தனது பதிவில் விமர்சித்துள்ளார். குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதிலும் டெல்லியில் உள்ள பாஜக அரசுக்கும் தமிழகத்தில் உள்ள த.வெ.க. அரசுக்கும் இடையே போட்டி நிலவுவதாகக் கூறிய ஸ்டாலின், அரசின் நடவடிக்கைகள் குறித்த தனது கடுமையான விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளார். இறுதியாக, கார்த்திகா மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டுள்ள கட்சியினரை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.