தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாடு அரசு மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இதற்கிடையே, நடிகர் சங்க கட்டிடப் பணிகளை காரணமாகக் கொண்டு, நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் தீர்மானம் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சங்கங்களின் பதிவாளர் ஒப்புதல் அளித்து, 2025-ம் ஆண்டு அக்டோபர் 14-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.
Advertisement
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், உறுப்பினர்களிடம் கருத்து கேட்காமலும், உரிய விசாரணை நடத்தாமலும் நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்று அரசு பிறப்பித்த உத்தரவு தன்னிச்சையானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும், நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த சங்கங்களின் பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். அப்போது, மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.