தேவதாஸாக களமிறங்கிய லோகேஷ்.. பாக்ஸ் ஆபிஸில் தொடங்கிய வேட்டை
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாகவும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருவதுடன், வசூலிலும் கவனம் ஈர்த்து வருகிறது.‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பிறகு ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கினார். குறிப்பாக, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார்.இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆக்சன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக வாமிகா கபி, சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டிசி’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ஆக்சன் காட்சிகளில் இடம்பெறும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே, ‘டிசி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி, படம் வெளியாகி 3 நாட்களில் உலகளவில் ரூ.18 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், லோகேஷ் கனகராஜின் ஹீரோ அவதாரம் வசூல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.