தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெறுமா? இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தமிழக பட்ஜெட் பணிகள்
17-வது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. அரசு ஆட்சியை அமைத்துள்ளது. 59 ஆண்டுகளாக நீடித்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து பொறுப்பேற்றுள்ள இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இந்த நிலையில், 2026–27 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி (புதன்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. த.வெ.க. அரசின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பெரும் கவனம் நிலவுகிறது.தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட த.வெ.க. தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது, ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், ஏழை பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் நிதியுதவி, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்குதல், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.இந்த வாக்குறுதிகளில் எவை பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் துறைவாரியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு துறையும் தனது திட்டங்கள் மற்றும் நிதி தேவைகள் குறித்து விரிவாக விளக்கி, அதன்படி பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.அனைத்து ஆலோசனைகளும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், 2026–27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணம் இறுதி வடிவம் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.