வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில் பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளின்போது 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பொறுப்பேற்க வேண்டும் எனக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலகச் செய்ய உத்தரவிடக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 12-ஆம் தேதி அவர்கள் பேரணியாக உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றனர். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற முடியாத இளவரசர், ஒருநாள் பேரரசராக வேண்டும் என்ற கனவுடன் அரசியல் நாடகத்தில் ஈடுபடுவதாக ராகுல் காந்தியை பாஜகவைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜனநாயக நாட்டில் தேர்தல் மூலமாக மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும், போராட்டங்கள் வழியாக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பது முறையல்ல என்றும் தெரிவித்தார். நாட்டில் உள்ள 90 கோடி வாக்காளர்களில் 90 சதவீதம் பேரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் சுமார் 20 லட்சம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். வாக்காளர் பட்டியலில் பிழைகள் இருந்தால் அவற்றைத் திருத்துவது அவசியம் எனக் குறிப்பிட்ட ஸ்மிருதி இரானி, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டுபவர்கள் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.