தென்மாநில முதல்வர்கள் மாநாடு: 8 கோடித் தமிழர்களின் குரல் ஒலிக்குமா? - வேல்முருகன்
மாமல்லபுரத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்தின் முக்கிய மாநில உரிமைகள் உரிய முக்கியத்துவத்துடன் முன்வைக்கப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தென்மாநில முதல்வர்கள் மாநாடு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கான ஒரு சாதாரண கூட்டமாக மட்டும் அமைந்துவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.காவிரி நீர் உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட தமிழகத்தின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மாநாட்டில் வலுவாக எடுத்துரைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துக்கு உரிய அளவில் காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதுடன், கர்நாடகத்தின் மேகதாது அணை திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.மாநிலங்களின் கல்வித் தேவைகள் மற்றும் மாணவர்களின் சமூகச் சூழலை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு ஒரே மாதிரியான தேர்வு முறைகளை திணிப்பது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் நீட் தேர்வை ரத்து செய்து மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நீர், கல்வி, வேலைவாய்ப்பு, மொழி, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாநிலங்களின் அதிகாரம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் வார்த்தையாக மட்டும் இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்தின் நீர்வள உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைகளையும் தமிழக முதல்வர் உறுதியாக முன்வைக்க வேண்டும் என வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், நீட் தேர்வை ரத்து செய்தல், காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உரிய தரவுகளுடன் மத்திய அரசிடம் வலியுறுத்தி, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.