Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 12 அக்டோபர் 2026 | 26 புரட்டாசி பராபவ வருடம்

திருவாரூரில் தண்ணீரின்றி கருகும் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

திருவாரூரில் தண்ணீரின்றி கருகும் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் போதிய பாசன நீர் கிடைக்காததால், 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நேரடி நெல் விதைப்புப் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68 அடிக்கும் கீழ் உள்ள நிலையில், அரசின் மீது நம்பிக்கை வைத்து மேற்கொண்ட சாகுபடியைக் காப்பாற்ற முடியாத சூழல் நிலவுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு வசதி கொண்ட விவசாயிகளைத் தவிர, பெரும்பாலான விவசாயிகள் போதிய தண்ணீர் இல்லாததால் குருவை சாகுபடியில் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இதற்கிடையே, மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்காக 3.75 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகள் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 70 ஆயிரம் ஏக்கர் நேரடி நெல் விதைப்பு முறையில் பயிரிடப்பட்டுள்ளது. திருவாரூர் வெண்ணாறு, தஞ்சாவூர் வெண்ணாறு, தஞ்சாவூர் காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகள் மற்றும் அவற்றிலிருந்து பிரியும் கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்கள் வழியாக வயல்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டுமே ஆற்று நீர் சென்றுள்ள நிலையில், பல இடங்களில் தண்ணீர் வரத்து இல்லாததால் வயல்களுக்குச் செல்லும் பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுகின்றன.

Advertisement
இதன் காரணமாக, திருவாரூர், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நேரடி நெல் விதைப்புப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விதைக்கப்பட்ட நெல் முளைத்துள்ள நிலையில், தொடர்ந்து தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் வாடி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்டத்தின் முக்கிய ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து வயல்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் பாசன வாய்க்கால்களில் நீர் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரை நம்பி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தற்போது பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு