திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதான விக்னேஷ், பெருமாநல்லூரில் செயல்பட்டு வரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். சுமார் 15 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே வந்த மான் மோதியதில் விக்னேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று ஸ்கேன் பரிசோதனைக்காக விக்னேஷை அழைத்துச் சென்றபோது ஆக்சிஜன் தீர்ந்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது விக்னேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டிய விக்னேஷின் உறவினர்கள் மற்றும் சக ஊழியர்கள், மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.