திருச்சி: ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது
திருச்சி மாவட்டத்தில் விவசாய நிலத்திற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குவதற்காக ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக நீர்வளத்துறையின் பணி ஆய்வாளர் ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த எட்வர்ட் (49), தனது விவசாய நிலத்திற்காக மேக்குடி கிராமத்தில் உள்ள மாங்குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி நீர்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.இந்த அனுமதி தொடர்பாக புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு–1-ல் பணியாற்றும் பணி ஆய்வாளர் லோகநாதன் (41) என்பவரை அவர் சந்தித்தபோது, அனுமதி வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.லஞ்சம் வழங்க விருப்பமில்லாத எட்வர்ட், இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
அதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டு கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.இதன்படி, திருச்சி மாவட்ட நீர்வளத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் எட்வர்டிடமிருந்து ரூ.4 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டிருந்த லோகநாதனை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.