சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தமிழக வெற்றிக் கழகத்துடனான அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தார். இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பேசுவதற்காக தவெக தரப்பினர் தங்களை அழைத்ததாக அவர் தெரிவித்தார். மேலும், புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். இருப்பினும், தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்றும், மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவோம் என்றும் பெ.சண்முகம் தெரிவித்தார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது முதல்-அமைச்சர் சம்பந்தமில்லாத விஷயங்களை பேசியதாக அவர் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளில் ஒன்றுக்குக் கூட முதல்-அமைச்சர் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். சட்டசபையில் நினைத்த அனைத்தையும் பேசுவது போன்ற அணுகுமுறையை தாங்கள் ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், சட்டமன்றம் தற்போது சண்டை மன்றமாக மாறிவிட்டதாக விமர்சித்த பெ.சண்முகம், சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
Advertisement
தேவையற்ற விவாதங்களை தவிர்த்து, சட்டமன்ற மரபுகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் நடைபெற வேண்டும் என்றும், அவையின் நேரத்தை வீணாக்காமல் முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மிசா கைது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் பேசியது சிறுபிள்ளைத்தனமான கருத்து என பெ.சண்முகம் விமர்சித்தார். மிசா காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் இருந்ததாகவும், அப்போது நடைபெற்ற கொடுமைகள் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். மிசா கால சிறைக் கொடுமைகள் குறித்த வரலாற்றை தவெக அமைச்சர்கள் படிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தவெகவுக்கு வெளியில் இருந்து தங்களது ஆதரவு தொடரும் என்றும் பெ.சண்முகம் கூறினார். அதேவேளையில், தவெக அரசுக்கு ஐந்து ஆண்டுகளும் ஆதரவு அளிப்போம் என்று இப்போதே உறுதியாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தவெகவின் எதிர்கால நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே, அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பெ.சண்முகம் விளக்கினார்.