Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

தலைமுறைகள் கடந்த ஒற்றுமை: ஆந்திராவில் 83 பேர் வாழும் மெகா கூட்டுக்குடும்பம்

தலைமுறைகள் கடந்த ஒற்றுமை: ஆந்திராவில் 83 பேர் வாழும் மெகா கூட்டுக்குடும்பம்
ஆந்திர மாநிலத்தில் 6 தலைமுறைகளாக 83 பேர் ஒரே குடும்பமாக இணைந்து வாழ்ந்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இன்றைய நவீன வாழ்க்கை முறையில் வேலை, தொழில் உள்ளிட்ட காரணங்களால் குடும்பத்தை விட்டு வெவ்வேறு இடங்களில் சென்று வசிப்பது அதிகரித்துள்ளது. இதனால் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையும் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், ஆந்திராவில் ஒரு குடும்பம் பல தலைமுறைகளாக எந்தவித பெரிய சச்சரவுமின்றி ஒன்றாக வசித்து வருகிறது.அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குர்லபள்ளி கிராமத்தில் வசிக்கும் இந்த குடும்பம், அப்பகுதியில் மிகவும் பிரபலமானது. கிராமத்தில் “முத்தியாலப்பா வீடு எங்கே?” என்று கேட்டால், சிறுவர்களுக்குக்கூட தெரியும் அளவுக்கு அந்த குடும்பம் அனைவருக்கும் அறிமுகமானதாக உள்ளது.இந்த 6 தலைமுறை கூட்டுக்குடும்பத்தின் மூத்தவராக முத்தியாலப்பா இருந்து வருகிறார். வயதில் மூத்தவர் என்பதால் குடும்பத்தில் அவரது முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்கின்றனர். அவர் தபால் துறையில் பணியாற்றி வருகிறார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியூரில் வேலைக்குச் செல்லாமல், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை குடும்பத் தொழிலாக செய்து வருகின்றனர்.முத்தியாலப்பாவுடன் சேர்த்து 4 மைத்துனர்கள், 6 நாத்தனார்கள், 14 மருமகள்கள் மற்றும் 32 குழந்தைகள் என மொத்தம் 83 பேர் இந்த குடும்பத்தில் உள்ளனர். அருகருகே அமைந்துள்ள 3 பெரிய வீடுகளில் அனைவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகமாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதால் பிரச்சினைகளுக்கு இடமில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். நவீன சமையல் சாதனங்கள் இருந்தாலும், இந்த குடும்பத்தில் இன்றும் விறகு அடுப்பிலேயே சமையல் நடைபெறுகிறது. குடும்ப பெண்கள் பெரிய அம்மிக்கல்லில் மசாலா உள்ளிட்டவற்றை அரைத்து பயன்படுத்துகின்றனர்.ஒரு நாள் மதிய உணவுக்காக சுமார் 50 கிலோ அரிசியில் சாதம் தயாரிக்கப்படுகிறது. குழம்பு, கூட்டு உள்ளிட்ட உணவுகளுக்கு பெரும்பாலும் தங்களது தோட்டத்தில் விளையும் காய்கறிகளே பயன்படுத்தப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் அசைவ உணவு சமைக்கப்படுகிறது. அன்று ஒரு பெரிய செம்மறி ஆடு இறைச்சிக்காக வெட்டப்படுவதுடன், 10 கிலோ கோழிக்கறியும் சமைக்கப்படுகிறது.காலை உணவாக களி, மதிய உணவாக சாதம், இரவு சப்பாத்தி ஆகியவை வழக்கமாக உள்ளன.
Advertisement
ஒரு வேளைக்கு சப்பாத்தி தயாரிக்க சுமார் 15 கிலோ கோதுமை மாவு தேவைப்படுகிறது. மாலை நேரங்களில் குழந்தைகளுக்காக பஜ்ஜி மற்றும் இனிப்பு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.தங்கள் குடும்ப ஒற்றுமை குறித்து முத்தியாலப்பா கூறுகையில், தங்களது தாத்தா காலத்தில் இருந்தே அனைவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும், இனியும் இதே ஒற்றுமையை தொடர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பால்வாடி முதல் கல்லூரி வரை கல்வி பயின்று வருகின்றனர். அனைவரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே படித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.மேலும், குடும்பமாக இணைந்து செயல்பட்டதன் மூலம் 65 ஏக்கராக இருந்த தங்களது நிலத்தை 120 ஏக்கராக விரிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த நிலங்களில் மிளகாய், கத்தரிக்காய், தக்காளி, தர்பூசணி, பப்பாளி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.குடும்பத்துக்கு சொந்தமாக 4 பேருந்துகள் உள்ளன. அவற்றை சுற்றுலா செல்வோருக்கு வாடகைக்கு வழங்கி வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பணிகளையும் குடும்ப உறுப்பினர்களே இணைந்து கவனித்து வருகின்றனர்.ஒரே நேரத்தில் தங்களது குடும்பத்தில் 9 திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் முத்தியாலப்பா தெரிவித்துள்ளார். உறவுமுறை பொருத்தமாக இருந்தால், குடும்பத்திற்குள்ளேயே திருமணங்களை நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். தங்களது ஒற்றுமையான வாழ்க்கை முறையை கிராம மக்கள் பாராட்டி வருவதாகவும், எதிர்காலத்திலும் இதேபோல் ஒன்றாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.83 பேர் கொண்ட குடும்பமாக இருந்தாலும், 3 வீடுகளுக்கான மொத்த மாத மின்சாரக் கட்டணம் ரூ.2,700 மட்டுமே வருகிறது. குடும்பத்தினர் மின்சாரத்தை மிகக் குறைவாகவே பயன்படுத்துவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.தலைமுறைகள் மாறினாலும் குடும்ப ஒற்றுமையை தொடர்ந்து பாதுகாத்து வரும் இந்த மெகா கூட்டுக்குடும்பம், இன்றைய காலத்திலும் கூட்டாக வாழ்வதற்கான ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு