தமிழ்நாட்டில் வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre - GCC) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (18.9.2026) கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம், சென்னையில் தமிழ்நாடு அரசு புதிதாக அறிவித்துள்ள OMR GCC வழித்தடத்தில் உள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் இந்த மையத்தை அமைக்க உள்ளது. இந்த உலகளாவிய திறன் மையத்தின் மூலம் முதல் ஆண்டில் 250 பேருக்கு உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் மையத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வால்கிரீன்ஸ் நிறுவனம் உலகளவில் முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மருந்தக சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் இயங்கி வரும் இந்நிறுவனம், இந்தியாவில் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க தமிழ்நாட்டைத் தேர்வு செய்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் வணிகச் சேவைகளை மையமாகக் கொண்டு செயல்படவுள்ள இந்த GCC, OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் நிறுவப்பட உள்ளது.
Advertisement
இந்தியாவில் வால்கிரீன்ஸ் நிறுவனம் முதன்முறையாக அமைக்கவுள்ள உலகளாவிய திறன் மையம் தமிழ்நாட்டில் உருவாக உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், GCC துறையில் உயர்மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் GCC வளர்ச்சியில் வால்கிரீன்ஸ் இணைவது, உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிகச் சேவைகளுக்கான முக்கிய மையமாக மாநிலம் வளர்ந்து வருவதையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் Tier-II மற்றும் Tier-III நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., வால்கிரீன்ஸ் உலகளாவிய திறன் மையத்தின் தலைவர் உமாபதி விஸ்வநாதன், வால்கிரீன்ஸ் நிறுவன இயக்குநர் மசூத் அகமது உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.