பா.ஜ.க. ஆட்சி நடைபெறாத மாநிலங்களிலும் சுமார் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனங்களில் ஒன்றாக அதானி குழுமம் உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு அதானி குழுமத்துக்கு சாதகமாக செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, அந்த நிறுவனத்துக்கு ஆதரவான கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும், இதன் காரணமாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதானி குழுமத்தின் முதலீடுகள் அதிகரிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களிலும் அதானி குழுமம் தனது முதலீடுகளை விரிவுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. சாலைகள், துறைமுகங்கள், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிமெண்டு, தரவு மையங்கள் உள்ளிட்ட துறைகளில் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சுமார் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மேற்கொள்ள அந்த குழுமம் ஆர்வம் காட்டி வருகிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் தனியார் முதலீடுகளை ஈர்க்க மாநில அரசுகள் முயற்சிப்பதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.கர்நாடகாவில் பெங்களூருவில் ஹெப்பால் முதல் சென்டிரல் சில்க் போர்டு வரையிலான சுரங்கப்பாதை சாலை திட்டத்துக்கான ஏலத்தில் அதானி நிறுவனம் குறைந்தபட்ச ஏலதாரராக உள்ளது.கேரளாவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.
Advertisement
இதுதவிர, திருவனந்தபுரம் விமான நிலையத்தையும், கொச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்காவையும் அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது.தெலுங்கானாவில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களிலும் குழுமம் ஈடுபட்டுள்ளது. ஜார்கண்டில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை ஏற்கனவே இயக்கி வருகிறது. இமாசலபிரதேசத்தில் ஆப்பிள் விவசாயிகளுக்கான விநியோகச் சங்கிலி மற்றும் சிமெண்டு துறையிலும் அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் தி.மு.க. மற்றும் தற்போது த.வெ.க. ஆட்சி நடைபெறும் நிலையில், இந்த இரு கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. இருந்தபோதிலும், தமிழ்நாட்டிலும் அதானி குழுமத்துக்கான கணிசமான முதலீட்டுத் திட்டங்கள் ஈர்க்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு முதல் ரூ.42,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை குழுமம் அறிவித்துள்ளது.மேலும், சென்னை வெளிவட்டச் சாலையின் இயக்கம், பராமரிப்பு மற்றும் சுங்க வசூல் உரிமையையும் ரூ.2,511 கோடி மதிப்பிலான நிதி ஏலத்தின் மூலம் அதானி குழுமம் பெற்றுள்ளது.அரசியல் கட்சி சார்ந்த எல்லைகளைத் தாண்டி, பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டு முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், அதானி குழுமம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டுமே முதலீடு செய்கிறது என்ற கருத்து தவறானது என இந்த முதலீட்டு விவரங்கள் காட்டுவதாக கூறப்படுகிறது.