Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

ஆம்னி பேருந்துகளுக்கான புதிய பர்மிட்கள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் போக்குவரத்து பற்றாக்குறை, அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பு மற்றும் பேருந்து உரிமையாளர்களின் பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் இருந்து தினமும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சுமார் 1,200 ஆம்னி பேருந்துகளும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பகுதிகளுக்கு சுமார் 600 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் சென்னையில் இருந்து மட்டும் தினசரி சுமார் 1,800 ஆம்னி பேருந்துகளில் 70,000-க்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதுடன், தினமும் 2.50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். பொதுமக்களின் போக்குவரத்து தேவையில் முக்கிய பங்கு வகிக்கும் இத்துறை, அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.900 கோடி நேரடி வருவாயையும், சுமார் ரூ.3,000 கோடி மறைமுக வருவாயையும் பெற்றுத் தருகிறது. அரசு பொறுப்பேற்ற பின்னர், முந்தைய போக்குவரத்து ஆணையர் பதவியில் இருந்த காலகட்டத்தில் 51 நாட்களுக்கும் மேலாக ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட்கள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய போக்குவரத்து ஆணையர் பொறுப்பேற்ற பிறகு, பர்மிட் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செயல்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு, முதற்கட்டமாக சுமார் 270 பர்மிட்கள் விரைவாக வழங்கப்பட்டன. ஆனால் அதன்பிறகு விண்ணப்பிக்கப்பட்ட சுமார் 300 பர்மிட்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட 270 பர்மிட்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பல பேருந்துகளுக்கு, ஒவ்வொரு பேருந்துக்கும் காலாண்டுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் சாலை வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் போக்குவரத்து ஆணையரின் இறுதி ஒப்புதல் கிடைக்காததால் அந்தப் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றுலா பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளின் பதிவு மற்றும் ஒப்புதல் பணிகளும் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலுவையில் இருப்பதால், பேருந்து உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன், அரசுக்கும் வரி வருவாய் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக சங்கம் கூறியுள்ளது. அதேசமயம், பயணிகளுக்கான போக்குவரத்து வசதியிலும் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 22 எல்லை சுங்கச் சாவடிகளிலும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ.500 முதல் ரூ.3,000 வரை கையூட்டு பெறப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
கோயம்பேட்டில் பேருந்து நிறுத்த வசதி கோரிக்கை கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளுக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 150 பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடியும். ஆனால் தினமும் சுமார் 1,200 ஆம்னி பேருந்துகள் அந்தப் பகுதி வழியாக இயக்கப்படுவதால், போதிய நிறுத்துமிடம், பேருந்துகளை காத்திருத்தல், பயணிகளை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக இல்லை என சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள கோயம்பேடு CMDA பேருந்து நிலையத்தை ஆம்னி மற்றும் அரசு பேருந்துகளின் பயன்பாட்டிற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஒதுக்க வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கோயம்பேட்டில் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கான இணைப்பு வசதிகள் இருப்பதால், வடசென்னை, மத்திய சென்னை, மேற்கு சென்னை பகுதிகளில் வசிக்கும் பயணிகள் எளிதாக பேருந்து நிலையத்தை சென்றடைய முடியும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பேருந்து நிலையத்தின் உள்ளேயே பயணிகளை ஏற்றி இறக்குவதன் மூலம் சுற்றுப்புற சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 'கோயம்பேடு + கிளாம்பாக்கம்' என்ற பல்முனை திட்டம் கோயம்பேடு பேருந்து நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றான திட்டம் அல்ல என்றும் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. 'கோயம்பேடு + கிளாம்பாக்கம்' என்ற Multi Hub முறையில், வடசென்னை, மத்திய சென்னை மற்றும் மேற்கு சென்னை பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் கோயம்பேட்டில் இருந்தும், தென் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் பேருந்துகளில் பயணிக்கும் வகையில் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் வட, மத்திய மற்றும் மேற்கு சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கிளாம்பாக்கம் செல்ல கூடுதலாக சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்வதும், வழியில் இரண்டு பேருந்துகளை மாற்றிப் பிடிக்கும் சிரமமும் குறையும் என சங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் கோயம்பேட்டில் இருந்தே ஒரே பேருந்தில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்றும் கூறியுள்ளது. இதனால் பயணிகளின் நேரமும் செலவும் மிச்சமாகும் என்றும், அதே நேரத்தில் பேருந்து நிலைய நுழைவுக் கட்டணம் மற்றும் வணிக வசதிகள் வாயிலாக அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, பயணிகளின் நேரம், செலவு மற்றும் பயணச் சிரமங்களை குறைக்கும் வகையிலும், பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் தங்களது கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் விஜய் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு