தமிழக அரசு சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை பாதுகாக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குமுறைச் சட்ட விதிகள் 2018-ஐ எளிமைப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் கடந்த 13.2.2026 அன்று அரசாணை எண் 41 மூலம் வெளியிடப்பட்டன.இந்த அரசாணையின்படி, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் உள்ளிட்ட அடிப்படை மற்றும் எளிய பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் ‘அடிப்படை பரிசோதனை நிலையங்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.இத்தகைய சிறிய ஆய்வகங்களில் லேப் டெக்னீசியன்கள் மேற்கொள்ளும் பரிசோதனைகளுக்கான முடிவு அறிக்கைகளில், மருத்துவர் அல்லது மருத்துவ நோய்க்குறியியல், மருத்துவ நுண்ணுயிரியியல், மருத்துவ உயிர் வேதியியல் ஆகிய துறைகளில் முதுநிலை படிப்பு முடித்த ஒருவர் கையெழுத்திட வேண்டும் என புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட படிப்பை முடித்த பின்னர் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலும், தமிழகத்திலும் ரத்தப் பரிசோதனை நிலையங்களை நடத்துவதற்கும், பரிசோதனை முடிவுகளில் கையெழுத்திட்டு வழங்குவதற்குமான கல்வித் தகுதிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவை நடைமுறையில் இருந்து வருகின்றன. இதன் அடிப்படையில் இதுவரை லேப் டெக்னீசியன்களே பரிசோதனை முடிவுகளில் கையெழுத்திட்டு வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், திடீரென புதிய நிபந்தனைகள் கொண்டு வரப்படுவது சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை மூடும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.தமிழகத்தில் செயல்படும் ரத்தப் பரிசோதனை நிலையங்களில் சுமார் 80 சதவீதம் சிறிய அளவிலான ஆய்வகங்களாக உள்ளன.