தமிழகத்தில் மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை அளிக்கும் நிலை: டிடிவி தினகரன் கடும் கண்டனம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், அவரது வீட்டிற்கே நேரில் சென்று அத்துமீறியதாகவும் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்துள்ள புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், அவரது இல்லத்திற்குச் சென்று முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது முதல், சொந்தக் கட்சி நிர்வாகியைக் காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எழுந்த புகார்கள் வரை, பெண்களை இழிவாக நடத்தும் தவெக நிர்வாகிகள் மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய போக்கின் விளைவாக, தற்போது மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுக்க முயலும் அளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் நலத்திட்ட ஒப்பந்தங்களில் லஞ்சம் பெறுவது, குறைகளைத் தெரிவிக்க வரும் பொதுமக்களைத் தாக்குவது, தற்போது மாவட்ட ஆட்சியரிடமே அத்துமீறியதாகப் புகார் எழுவது என தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியதாக உள்ளன. மக்கள் பணியாற்றுவதற்காக தவெக தலைவர் ஜோசப் விஜய் தேர்வு செய்த பிரதிநிதிகளின் இத்தகைய நடவடிக்கைகள், திரையில் வரும் கற்பனை வில்லன்களை நிஜ வாழ்க்கையில் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக மக்கள் வேதனை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.