தமிழகத்தில் மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை அளிக்கும் நிலை: டிடிவி தினகரன் கடும் கண்டனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
10 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை அளிக்கும் நிலை: டிடிவி தினகரன் கடும் கண்டனம்

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை அளிக்கும் நிலை: டிடிவி தினகரன் கடும் கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், அவரது வீட்டிற்கே நேரில் சென்று அத்துமீறியதாகவும் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்துள்ள புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், அவரது இல்லத்திற்குச் சென்று முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது முதல், சொந்தக் கட்சி நிர்வாகியைக் காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எழுந்த புகார்கள் வரை, பெண்களை இழிவாக நடத்தும் தவெக நிர்வாகிகள் மீது கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய போக்கின் விளைவாக, தற்போது மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுக்க முயலும் அளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் நலத்திட்ட ஒப்பந்தங்களில் லஞ்சம் பெறுவது, குறைகளைத் தெரிவிக்க வரும் பொதுமக்களைத் தாக்குவது, தற்போது மாவட்ட ஆட்சியரிடமே அத்துமீறியதாகப் புகார் எழுவது என தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியதாக உள்ளன. மக்கள் பணியாற்றுவதற்காக தவெக தலைவர் ஜோசப் விஜய் தேர்வு செய்த பிரதிநிதிகளின் இத்தகைய நடவடிக்கைகள், திரையில் வரும் கற்பனை வில்லன்களை நிஜ வாழ்க்கையில் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக மக்கள் வேதனை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே மாவட்ட ஆட்சியருக்குப் பாலியல் தொல்லை அளிக்கும் அளவுக்குச் செயல்படுவதாகப் புகார்கள் எழும் நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை யார் உறுதி செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் இருந்தும், தமிழகப் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்குமா என்ற கவலையும் நிலவுவதாக தினகரன் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமேடைகளில் பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் 'NO COMPROMISE' என்று பேசுவதற்கு முன்பாக, தங்கள் கட்சியினரின் தவறான செயல்பாடுகள் மீது தவெக தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது வீட்டிற்குச் சென்று அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்துள்ள புகாரை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.