தமிழகத்தின் வெற்றித் தலைநகராக திகழும் சென்னை: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
சென்னை மாநகரம் உருவான தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னை இன்று தனது 387-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.இதையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், சென்னை மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வரலாற்றுப் பெருமையை தாங்கியபடியே நவீன வளர்ச்சியுடன் முன்னேறி வரும் சென்னை, தமிழகத்தின் வெற்றித் தலைநகராக விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார். சென்னை நாளில் அனைவருக்கும் தனது இனிய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.வரலாறு மற்றும் பண்பாட்டுச் சிறப்புடன், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சென்னை தொடர்ந்து வளர்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உழைப்பு மற்றும் புதுமை இணையும் நகரமாகவும், பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் சென்னை திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சென்னையின் வரலாற்றுச் சிறப்பையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உள்கட்டமைப்புகளுடன் உலகத் தரம் வாய்ந்த பெருநகரமாக நகரை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகள், பாதுகாப்பான சூழல் மற்றும் வளமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்வோம் என்றும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் உயர வேண்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.