"தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி தேவையில்லை, நிலத்தை மேலும் கையகப்படுத்த அனுமதிக்க கூடாது" - சவுமியா அன்புமணி
தமிழ்நாட்டில் ஏற்கனவே மின்சார உற்பத்தி தேவையை விட அதிகமாக இருப்பதால், என்.எல்.சி. நிறுவனம் தேவையில்லை என்றும், மேலும் 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டின் தற்போதைய மின்சாரத் தேவை 21 ஆயிரம் மெகாவாட் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் சேர்த்து 36 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளதாக அவர் கூறினார்.இதில் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்களிப்பு 2 ஆயிரம் மெகாவாட் மட்டுமே என்பதால், அந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என சவுமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், என்.எல்.சி. தனது சி.எஸ்.ஆர். நிதியை முழுமையாக வடமாநிலங்களுக்கு வழங்குவதாகவும், தமிழகத்தில் அந்த நிதியின் மூலம் தடுப்பணைகள் மற்றும் நெல் குடோன்கள் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் ஒரே இரவில் ‘விஜயமாநகரம்’ என்ற இடத்தில் குடியமர்த்தப்பட்டு, தங்களது உடைமைகளுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த நிலையில், மேலும் 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக சவுமியா அன்புமணி குற்றம்சாட்டினார். இதற்கு எதிராக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி தலைமையில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்த வஜ்ரா வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.எனவே, கூடுதலாக 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி. நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். மேலும், அப்பகுதியில் இளநீரிலும் நச்சுத்தன்மையான டயாசின் இருப்பதாக சவுமியா அன்புமணி தெரிவித்தார்.