தமிழகத்தில் தனியார் பஸ்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
தமிழகத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் நாளை நடத்துவதாக அறிவித்திருந்த ஒருநாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், நாளை வழக்கம்போல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் தற்போதுநடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் ‘வெற்றிப்பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இதன்படி, மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திலும் சாதாரண அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தங்களது தொழிலை பாதிக்கும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் கே.தங்கராஜ், பொதுச்செயலாளர் டி.ஆர்.தர்மராஜ் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தின் மூலம் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிப்பதால் தனியார் பஸ்களின் வருவாய் பாதிக்கப்படும் என்றும், இதனால் பஸ்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர். மேலும், இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 3 லட்சம் குடும்பங்களும் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இலவச மகளிர் பயணத் திட்டத்துக்காக அரசு மானியம் வழங்குவதுபோல், தனியார் பஸ்களிலும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.