தமிழகத்தில் தனியார் பஸ்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகத்தில் தனியார் பஸ்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

தமிழகத்தில் தனியார் பஸ்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

தமிழகத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் நாளை நடத்துவதாக அறிவித்திருந்த ஒருநாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால், நாளை வழக்கம்போல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் தற்போதுநடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் ‘வெற்றிப்பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இதன்படி, மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திலும் சாதாரண அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தங்களது தொழிலை பாதிக்கும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் கே.தங்கராஜ், பொதுச்செயலாளர் டி.ஆர்.தர்மராஜ் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தின் மூலம் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிப்பதால் தனியார் பஸ்களின் வருவாய் பாதிக்கப்படும் என்றும், இதனால் பஸ்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர். மேலும், இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 3 லட்சம் குடும்பங்களும் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இலவச மகளிர் பயணத் திட்டத்துக்காக அரசு மானியம் வழங்குவதுபோல், தனியார் பஸ்களிலும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், தனியார் பஸ் தொழிலை பாதுகாக்கும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்துவதுடன், மகளிர் இலவச பயணத் திட்டத்தையும் தனியார் பஸ்களுக்கு விரிவுபடுத்தி மாற்றியமைக்க வேண்டும் என அரசை வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒருநாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்றும், அதன்படி இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை தனியார் பஸ்கள் இயக்கப்படாது என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், தனியார் பஸ் உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தங்களது பேட்டி மற்றும் கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களிடம் கொண்டு சென்றதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் தொடர்பு கொண்டு முக்கிய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்ததாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை அறிவிக்கப்பட்டிருந்த ஒருநாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை வழக்கம்போல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.