தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி த.வெ.க. அரசுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: த.வெ.க. அரசின் அலட்சியப் போக்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாகவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, செப்டம்பர் 21, 2026 வரை தமிழ்நாட்டில் 17,348 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் உண்ணிக் காய்ச்சலால் 4,653 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், செப்டம்பர் 21-ம் தேதி ஒரே நாளில் 71 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். டெங்கு பரவல் குறித்து ஊடகங்களும் பொதுமக்களும் தொடர்ந்து எச்சரித்தபோதும் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவத்திலும், அது ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் எனக் கூறி திசைதிருப்பும் முயற்சியில் காட்டப்பட்ட தீவிரத்துக்கு ஏற்ப சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதில் சுகாதாரத் துறை அமைச்சர் பங்கேற்காதது கண்டனத்திற்குரியது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். டெங்கு குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதுடன் அமைச்சர் அருண்ராஜ் தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிட்டு டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் கூறுவதாகவும், ஆனால் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 20 நாட்களில் பதிவான பாதிப்புகளைவிட இந்த ஆண்டு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement
டெங்குவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் விரைந்து வழங்குவதுடன், பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒவ்வொரு தெருவிலும் வீடு வீடாகச் சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அம்மா ஆட்சியிலும், தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியிலும் கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் ஆரம்ப நிலையிலேயே தீவிரப்படுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் டெங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு இனியாவது டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தேவையான மருந்துகள், மருத்துவப் படுக்கைகள் மற்றும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தி டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மழைக்காலங்களில் சாலைகள், வீடுகள் மற்றும் பாத்திரங்களில் தேங்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால், அவற்றைத் தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளை சுகாதாரத் துறை பணியாளர்கள் மூலம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். டெங்கு காய்ச்சல் தொடர்பான விளக்கங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை உடனடியாக வெளியிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என த.வெ.க. அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.