ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் மனு; ஆகஸ்ட் 3-ல் ஐகோர்ட்டில் விசாரணை
முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு வரும் 3-ஆம் தேதி நீதிபதி இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், முதல்-அமைச்சர் விஜயை மிரட்டும் விதமாகவும் அவதூறாகவும் கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது.அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் கடந்த 20-ஆம் தேதி மார்க்கண்டேயனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து, ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த முதல் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் கடந்த 22-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.