சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டத்தில், ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அபிரத் ரெட்டி 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார். கொடிமேலா ஹிமதேஜா 16 பந்துகளில் 25 ரன்களும், சாமா மிலிந்த் 12 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியின் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் சுவாமிநாதன் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷிவம் துபே மற்றும் சைராஜ் பாட்டீல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 173 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடியான தொடக்கத்தை அளித்தார்.
Advertisement
அவர் 13 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து விளையாடிய ஹர்திக் தமோரே 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய முஷீர் கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். மறுபுறம் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரன் வேட்டையில் ஈடுபட்டார். வெறும் 15 பந்துகளில் அரைசதத்தைக் கடந்த அவர், 21 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு துணையாக விளையாடிய ஷிவம் துபே 5 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் மும்பை அணி 13.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன்மூலம் 41 பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியைப் பதிவு செய்தது. அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.