செல்லப்பிராணிகளை கைவிட்டால் ரூ.10,000 அபராதம்: சென்னை மாநகராட்சி
சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை பொது இடங்களில் கைவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (செப். 25, 2026) ரிப்பன் கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இ.ஆ.ப., நிலைக்குழு மற்றும் மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் பொது இடங்களில் கைவிடப்படும் செல்லப்பிராணிகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளனர். ஏற்கெனவே நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ சிப்புகளை ஸ்கேனர் மூலம் பரிசோதித்து, அவற்றின் உரிமையாளர்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.