சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4,500 பேரில் 160 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 140 பேருக்கு டெங்கு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய பாதிப்பு சற்று அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடையாறு, அண்ணா நகர் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் பதிவாகியுள்ளது. இதனிடையே, இன்புளூயன்சா ஏ, ரைனோ வைரஸ், ஆர்.எஸ்.வி.
Advertisement
உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டால், மற்றவர்களுக்கும் அது வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை, கழிவுகள் தேங்காமல் அகற்றி தூய்மையை பராமரிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.