சென்னையில் 8 வட்டங்களில் 12 மினி தாலுகா அலுவலகங்கள்: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
சென்னையில் பொதுமக்கள் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை தங்களது இருப்பிடங்களுக்கு அருகிலேயே எளிதாகப் பெறும் வகையில், ரூ.2.14 கோடி செலவில் 12 மினி தாலுகா அலுவலகங்களை அமைக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்களும், பொதுமக்களுக்கான சேவைகளும் தடையின்றி சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு சேவைகளை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றி, விரைவான, எளிமையான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, முதல் பட்டதாரி சான்று, வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை இணையவழியில் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பெறும் வசதி நடைமுறையில் உள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், வருவாய்த்துறை தொடர்பான இணையவழிச் சேவைகள் மற்றும் நிலம் சார்ந்த இதர பணிகளை பொதுமக்கள் விரைவாகப் பெறுவதற்கு கூடுதல் அலுவலகங்கள் தேவைப்படுகின்றன.