சென்னையில் பொதுமக்கள் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை தங்களது இருப்பிடங்களுக்கு அருகிலேயே எளிதாகப் பெறும் வகையில், ரூ.2.14 கோடி செலவில் 12 மினி தாலுகா அலுவலகங்களை அமைக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்களும், பொதுமக்களுக்கான சேவைகளும் தடையின்றி சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு சேவைகளை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றி, விரைவான, எளிமையான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, முதல் பட்டதாரி சான்று, வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை இணையவழியில் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பெறும் வசதி நடைமுறையில் உள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், வருவாய்த்துறை தொடர்பான இணையவழிச் சேவைகள் மற்றும் நிலம் சார்ந்த இதர பணிகளை பொதுமக்கள் விரைவாகப் பெறுவதற்கு கூடுதல் அலுவலகங்கள் தேவைப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, 2026-27ஆம் நிதியாண்டுக்கான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையின்போது, சென்னையில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் துணை வட்டாட்சியர் தலைமையில் 12 மினி தாலுகா அலுவலகங்களை அமைக்க முதல்-அமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார். அலுவலகங்கள் அமையவுள்ள இடங்கள்: சென்னை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் பின்வரும் பகுதிகளில் இந்த அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. - பெரம்பூர் வட்டம்: கொடுங்கையூர், எருக்கஞ்சேரி. - மதுரவாயல் வட்டம்: போரூர். - அம்பத்தூர் வட்டம்: முகப்பேர், கொரட்டூர். - மாம்பலம் வட்டம்: சாலிகிராமம். - சோழிங்கநல்லூர் வட்டம்: நீலாங்கரை, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர். - வேளச்சேரி வட்டம்: திருவான்மியூர் - பெசன்ட் நகர். - மயிலாப்பூர் வட்டம்: திருவல்லிக்கேணி. - ஆலந்தூர் வட்டம்: மணப்பாக்கம். இந்த புதிய அலுவலகங்கள் மூலம் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகிலேயே வருவாய்த்துறை சேவைகளைப் பெற முடியும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.