சென்னையில் 20-ந் தேதி ஜோசப் விஜய் - டி.கே.சிவகுமார் சந்திப்பு: காவிரி நீர், மேகதாது குறித்து பேச்சுவார்த்தை
சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற உள்ள தென் மாநில முதல்-அமைச்சர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் வரும் 20-ந் தேதி சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பில் காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.தென் மாநில முதல்-அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு ஆகஸ்டு 19 மற்றும் 20-ந் தேதிகளில் கோவளத்தில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகின்றன.மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்-அமைச்சர்களும், புதுச்சேரி முதல்-மந்திரியும் பங்கேற்க உள்ளனர். தென் மாநிலங்களுக்கு இடையிலான முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.குறிப்பாக, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு, எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்டவை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.தமிழக சட்டசபையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.மாநாட்டின் ஒரு பகுதியாக, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் 20-ந் தேதி மாலை தனியாக சந்தித்து பேச உள்ளனர். அப்போது காவிரி நீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.முன்னதாக, கடந்த 3-ந் தேதி பெங்களூருவில் இரு மாநில முதல்-அமைச்சர்களும் சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு போராட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த சந்திப்பு நடைபெறவில்லை. அப்போது டி.கே.சிவகுமார், ஜோசப் விஜய் பெங்களூரு வருவதை மற்றொரு நாளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.இந்த சூழலில், தற்போது 20-ந் தேதி சென்னையில் இரு மாநில முதல்-அமைச்சர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது. காவிரி மற்றும் மேகதாது விவகாரங்கள் தொடர்பாக இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.