சென்னையில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம்
சென்னையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது. நவராத்திரி என்பது இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த விழாவை முன்னிட்டு வீடுகளில் பல்வேறு வகையான பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடுவது கொலு எனப்படுகிறது. தமிழ்நாட்டில் நவராத்திரி என்றும், கர்நாடகத்தில் தசரா என்றும், மேற்குவங்கம் உள்ளிட்ட வடஇந்திய பகுதிகளில் துர்காபூஜை என்றும் இந்தப் பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொதுவாக புரட்டாசி மாத மகாளய அமாவாசையைத் தொடர்ந்து வரும் பிரதமை திதியில் தொடங்கி 10 நாட்கள் இவ்விழா நடைபெறும். இது சக்தி வழிபாட்டுடன் தொடர்புடைய முக்கியமான விழாவாகக் கருதப்படுகிறது. கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வரும் தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார், நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் கொலு பொம்மைகள் கண்காட்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நடைபெற்ற கண்காட்சி, நேற்று காலை 10.30 மணியளவில் லில்லி, அரசு செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை மற்றும் அமிர்தஜோதி, நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் ஆகியோர் தலைமையில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி 28.09.2029 முதல் 31.10.2026 வரை, ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. பல்வேறு வகையான கொலு பொம்மைகள் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கொல்கத்தா களிமண், சுடுகளிமண் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடவுள் மற்றும் தெய்வ உருவங்கள், விலங்குகள் மற்றும் பல்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட கொலு பொம்மைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மரப்பாச்சி பொம்மைகள் கண்காட்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளன. கல்யாண செட், அஷ்டலட்சுமி செட், தசாவதாரம், அறுபடைவீடு, வைகுண்டம், யசோதா கிருஷ்ணா, கிராமத்துப் பெண்கள், பொங்கல், சங்கீத மும்மூர்த்திகள், கும்பகர்ணன், விநாயகர் தர்பார், கார்த்திகைப் பெண்கள், கருட சேவை, திருப்பதி ஊஞ்சல், பிரம்மோற்சவம், கரகாட்டம், சேதுபந்தனம், ஐயப்பன், தெப்பக்குளம், குபேர லட்சுமி, கள்ளழகர், பழனி காவடி உள்ளிட்ட பல்வேறு செட்கள் இடம்பெற்றுள்ளன.