சென்னையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது. நவராத்திரி என்பது இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த விழாவை முன்னிட்டு வீடுகளில் பல்வேறு வகையான பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடுவது கொலு எனப்படுகிறது. தமிழ்நாட்டில் நவராத்திரி என்றும், கர்நாடகத்தில் தசரா என்றும், மேற்குவங்கம் உள்ளிட்ட வடஇந்திய பகுதிகளில் துர்காபூஜை என்றும் இந்தப் பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொதுவாக புரட்டாசி மாத மகாளய அமாவாசையைத் தொடர்ந்து வரும் பிரதமை திதியில் தொடங்கி 10 நாட்கள் இவ்விழா நடைபெறும். இது சக்தி வழிபாட்டுடன் தொடர்புடைய முக்கியமான விழாவாகக் கருதப்படுகிறது. கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வரும் தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார், நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் கொலு பொம்மைகள் கண்காட்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நடைபெற்ற கண்காட்சி, நேற்று காலை 10.30 மணியளவில் லில்லி, அரசு செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை மற்றும் அமிர்தஜோதி, நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் ஆகியோர் தலைமையில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி 28.09.2029 முதல் 31.10.2026 வரை, ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. பல்வேறு வகையான கொலு பொம்மைகள் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கொல்கத்தா களிமண், சுடுகளிமண் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடவுள் மற்றும் தெய்வ உருவங்கள், விலங்குகள் மற்றும் பல்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட கொலு பொம்மைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மரப்பாச்சி பொம்மைகள் கண்காட்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளன. கல்யாண செட், அஷ்டலட்சுமி செட், தசாவதாரம், அறுபடைவீடு, வைகுண்டம், யசோதா கிருஷ்ணா, கிராமத்துப் பெண்கள், பொங்கல், சங்கீத மும்மூர்த்திகள், கும்பகர்ணன், விநாயகர் தர்பார், கார்த்திகைப் பெண்கள், கருட சேவை, திருப்பதி ஊஞ்சல், பிரம்மோற்சவம், கரகாட்டம், சேதுபந்தனம், ஐயப்பன், தெப்பக்குளம், குபேர லட்சுமி, கள்ளழகர், பழனி காவடி உள்ளிட்ட பல்வேறு செட்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் நவதுர்க்கை, நவ நரசிம்மர், மனுநீதி, கோலாட்டம், சஞ்சீவி மலை, காதணி விழா, நால்வர், சப்த ரிஷிகள், சாப்பாடு பந்தி, பொய்க்கால் குதிரை, ராமர், ராமர் பட்டாபிஷேகம், மீனாட்சி கல்யாணம், கிரிக்கெட், கல்யாண ஊர்வலம், பாண்டுரங்கன், திருவண்ணாமலை கிரிவலம், அண்ணாமலை உண்ணாமலை, சீனிவாசர் கல்யாணம், திருப்பதி தேர், விவசாயம், லட்சுமி சரஸ்வதி, கோவர்த்தனகிரி, குபேரன், வாரணமாயிரம், காய்கறிகள் மற்றும் ஸ்ரீ காஞ்சி பெரியவர் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை மையமாகக் கொண்ட கொலு பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைப்பு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்படும் கொலு பொம்மைகளுடன், ஆந்திரப் பிரதேசத்தின் கொண்டப்பள்ளி, சென்னைப்பட்டனா மற்றும் எட்டிக்குப்பாமர பொம்மைகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர கர்நாடகம், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட கொலு பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கொலு பொம்மைகளுக்கு அப்பால் பல்வேறு பரிசுப் பொருட்கள் மற்றும் கலைப்பொருட்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. சந்தன மரப்பொருட்கள், வெண்மரப் பொருட்கள், நூக்கமரப் பொருட்கள், பித்தளைப் பொருட்கள், ஓவியங்கள், பல்வேறு துணி வகைகள் மற்றும் பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவையும் பொதுமக்களின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து வங்கி அட்டைகளும் சேவைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.50 முதல் ரூ.1.25 லட்சம் வரையிலான விலைகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி மூலம் ரூ.100 லட்சம் அளவுக்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் கைவினைப் பொருட்களை வாங்குவதன் மூலம் தங்களது இல்லங்களை அலங்கரிப்பதுடன், இப்பொருட்களை உருவாக்கும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்துக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் ஆதரவளிக்க முடியும் என்ற நோக்கத்திலும் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.