சென்னையில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்: 2,430 மருத்துவ முகாம்கள் மூலம் 81,199 பேர் பயன்
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய்களைத் தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை 2,430 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 81,199 பேர் மருத்துவப் பயன் பெற்றுள்ளனர். மேலும், கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிகளில் 3,703 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொசு ஒழிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 140 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 16 சமுதாய நல மருத்துவமனைகள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒரு தொற்றுநோய் மருத்துவமனை என மொத்தம் 360 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுடன் 10 டயாலிசிஸ் மையங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து மருத்துவ நிலையங்களிலும் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நோக்கில், மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை சார்பில் தினமும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, குடிசைப் பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களுக்கு முன்னுரிமை அளித்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த வகையில், அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை 2,359 முகாம்கள் நடத்தப்பட்டு, 78,996 பேர் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து, நவம்பர் 10-ம் தேதி 71 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 2,203 பேர் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 2,430 முகாம்கள் நடத்தப்பட்டு, 81,199 பேர் பயனடைந்துள்ளனர். மேலும், பிரசவத்திற்கான எதிர்பார்க்கப்படும் தேதி (EDD) இந்த மாதத்தில் நெருங்கும் 237 கர்ப்பிணித் தாய்மார்களை மாநகராட்சி அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி ஏதேனும் தேவையா என்றும் விசாரித்துள்ளனர். கொசு ஒழிப்புப் பணியில் 3,703 பேர் டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில், வீடுகள் தோறும் மாநகராட்சி களப்பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.