வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் நோய்களைத் தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை 2,430 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 81,199 பேர் மருத்துவப் பயன் பெற்றுள்ளனர். மேலும், கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிகளில் 3,703 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொசு ஒழிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 140 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 16 சமுதாய நல மருத்துவமனைகள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒரு தொற்றுநோய் மருத்துவமனை என மொத்தம் 360 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுடன் 10 டயாலிசிஸ் மையங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து மருத்துவ நிலையங்களிலும் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நோக்கில், மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை சார்பில் தினமும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, குடிசைப் பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களுக்கு முன்னுரிமை அளித்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த வகையில், அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை 2,359 முகாம்கள் நடத்தப்பட்டு, 78,996 பேர் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து, நவம்பர் 10-ம் தேதி 71 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 2,203 பேர் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 2,430 முகாம்கள் நடத்தப்பட்டு, 81,199 பேர் பயனடைந்துள்ளனர். மேலும், பிரசவத்திற்கான எதிர்பார்க்கப்படும் தேதி (EDD) இந்த மாதத்தில் நெருங்கும் 237 கர்ப்பிணித் தாய்மார்களை மாநகராட்சி அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி ஏதேனும் தேவையா என்றும் விசாரித்துள்ளனர். கொசு ஒழிப்புப் பணியில் 3,703 பேர் டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில், வீடுகள் தோறும் மாநகராட்சி களப்பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ள தேங்காய் ஓடுகள், கண்ணாடிப் பொருட்கள், பழைய டயர்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் அகற்றப்படுகின்றன. வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் தண்ணீர்த் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என ஆய்வு செய்து, தேவைப்படும் இடங்களில் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும், வீடுகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. இதனுடன், சம்பந்தப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளிலும் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. தெருக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புகைமருந்து அடிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக மொத்தம் 3,703 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தினமும் 80 முதல் 100 வீடுகள் வரை நேரில் சென்று ஆய்வு செய்கின்றனர். இதில் கொசு உற்பத்தி மற்றும் பாதிப்பு அதிகமுள்ள 372 இடங்கள் கண்டறியப்பட்டு, அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் மாதிரிகள் பரிசோதனை பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் வகையில், அதில் எஞ்சியுள்ள குளோரின் அளவும் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது. நவம்பர் 9-ம் தேதி 515 குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 42 நீரேற்று நிலையங்கள், 340 பொது குடிநீர் வழங்கும் இடங்கள், 52 மெட்ரோ லாரிகள், 71 மெட்ரோ குடிநீர்த் தொட்டிகள் மற்றும் 10 தனியார் லாரிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அடங்கும். இந்தப் பரிசோதனையில் குளோரின் சேர்க்கப்படாத மாதிரி எதுவும் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து, நவம்பர் 10-ம் தேதி 1,166 குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 52 நீரேற்று நிலையங்கள், 807 பொது குடிநீர் வழங்கும் இடங்கள், சென்னை குடிநீர் வாரியத்தின் 139 லாரிகள், 130 குடிநீர்த் தொட்டிகள் மற்றும் 38 தனியார் லாரிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கிருமி நீக்கம் செய்வதற்காக தற்போது 53,405 கிலோ பிளீச்சிங் பவுடர் இருப்பில் உள்ளது. பருவமழைக் காலத்தில் தேவையைச் சமாளிக்கும் வகையில் கூடுதலாக 150 டன் பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்யவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.