செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு; கைது நடவடிக்கைக்கும் இடைக்காலத் தடை
தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாகவும், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவிலான முறைகேடு நடைபெற்றதாகவும், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் தொடர்பாக ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாகவும் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் சட்டநடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார்.மேலும், தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் தினந்தோறும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.இதற்கிடையில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உள்ளிட்ட ஏழு பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு சட்டம் உள்ளிட்ட ஒன்பது சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 2021 முதல் 2025 வரை முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கில் கைது அச்சம் இருப்பதாகக் கூறி, செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, டாஸ்மாக் முறைகேடு மற்றும் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்பு தொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என்பதற்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக காவல்துறை தரப்பு முன்வைத்த வாதத்தை ஏற்று, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணையின்போது, செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழைய வழக்கு மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக உறுதியளித்து, அவருக்கு முன்ஜாமீன் வழங்கி கைது செய்யக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், டாஸ்மாக் வழக்கில் ரூ.100 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என்பதற்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் உள்ளதாகவும், முந்தைய ஆட்சிக் காலத்தில் விசாரணைக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும் வாதிட்டார். எனவே, காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மேல் அரசுத் தரப்பு என்ன எதிர்பார்க்கிறது என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதுடன், அவரை கைது செய்யவும் இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இந்தவழக்கில்லஞ்சஒழிப்புத்துறைபதிலளிக்குமாறும்நீதிமன்றம்உத்தரவிட்டது.அதேவேளையில், தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளையும் சுப்ரீம் கோர்ட்டு விதித்தது. இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், வழங்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.