சிக்கிமில் சுரங்க நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு; 3 தொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்
சிக்கிம் மாநிலத்தில் சுரங்கம் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 3 தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் நாம்சி மாவட்டத்திலுள்ள ஜொலுங்கே நகரின் சமர்டங் பகுதியில் சுரங்கப் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 20-ஆம் தேதி பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், 25 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆட்சியர் அனுபா தம்லிங் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், சிக்கிம் காவல்துறை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிக்கிம் முதல்-மந்திரி பிரேம் சிங் தமங், நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விழுந்ததாகவும், மீட்புப் பணிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேரில் தொடர்புகொண்டு விவரங்களை கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.