தமிழகத்தில் இளைஞர்களின் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு கனவை பாதிக்கும் வகையிலான அரசாணைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக படித்த இளைஞர்களுக்கான நிரந்தர அரசு வேலை வாய்ப்புகளை குறைத்து, ஒப்பந்தப் பணிமுறையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை என்று தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 7 புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 16-ம் தேதி வெளியான அரசாணை எண் 261 மூலம் அந்த கல்லூரிகளுக்கான நிதிப் பொறுப்பை அரசு தவிர்த்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைய உள்ள புதிய அரசு செவிலியர் கல்லூரிகளுக்கு தமிழக அரசு நேரடியாக நிதி வழங்காது என்றும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் ரூ.270.27 கோடியை திரட்ட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பல்கலைக்கழகம் எந்த வழியில் திரட்டும் என்ற கேள்வி எழுவதுடன், அதற்காக மாணவர்களிடம் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற சந்தேகமும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், புதிய கல்லூரிகளுக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு நிரந்தர பணியிடங்களும் ஓய்வூதியப் பலன்களும் கிடையாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்துள்ளார்.
Advertisement
இதேபோல், செப்டம்பர் 11-ம் தேதி வெளியான அரசாணை எண் 258 மூலம், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் 4 லட்சத்துக்கும் அதிகமான செவிலியர்களில் 4,724 பேரை மட்டுமே, அதுவும் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது உயர்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளில் ஒப்பந்த முறையை செயல்படுத்துவது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் நிஜாம் முகைதீன் குறிப்பிட்டுள்ளார். அரசே தனியார் நிறுவனங்களைப் போன்று ஒப்பந்தப் பணிமுறையை அதிகரித்து, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நிலை ஏற்பட்டால், தனியார் துறையில் நடைபெறும் தொழிலாளர் உரிமை மீறல்களுக்கு எதிராக அரசு எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற கொள்கைகள் அரசு மருத்துவக் கட்டமைப்பை பாதிக்கும் சூழலை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செப்டம்பர் 11 மற்றும் 16-ம் தேதிகளில் வெளியிடப்பட்ட அரசாணைகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. புதிய செவிலியர் கல்லூரிகளுக்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்றும், செவிலியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தரப் பணியிடங்களாக உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.