சட்டவிரோதமாக ரசாயனங்கள் பயன்படுத்துவதை தடுக்க புதிய விதிமுறை: மத்திய அரசு திட்டம்
உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் பல்வேறு தொழில்துறை பொருட்களை தயாரிக்க பயன்படும் ரசாயனங்கள், மூலப்பொருட்கள் சிலரால் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்கும் நோக்கில், ரசாயனங்கள் போதைப்பொருள் உற்பத்திக்கு திருப்பிவிடப்படுவதை கட்டுப்படுத்த கடுமையான நடத்தை விதிமுறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் இணைந்து இதற்கான விதிமுறைகளை உருவாக்கி வருகிறது. இந்த நடவடிக்கையில் ரசாயன உற்பத்தி நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற உள்ளனர்.புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தால், ரசாயனங்கள் அனுப்பப்படும் முறையை கண்காணிப்பது, வாங்குபவர்களின் தகவல்களை சரிபார்ப்பது, குடோன்களில் உள்ள ரசாயன இருப்புகளை தணிக்கை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.