கோவாவில் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்த நடிகர் அர்ஜுன் ராம்பால்
8 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகர் அர்ஜுன் ராம்பால், தனது 54-வது வயதில் மாடல் அழகி கேப்ரியெல்லா டெமெட்ரியேட்ஸை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
‘துரந்தர்’ திரைப்படத்தில் மேஜர் இக்பால் கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் ராம்பால், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். மாடல் கேப்ரியெல்லா டெமெட்ரியேட்ஸை சந்தித்த பிறகு, இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அந்த நட்பு பின்னர் காதலாக மாறியது.இந்நிலையில், அர்ஜுன் ராம்பால் மற்றும் கேப்ரியெல்லா கோவாவில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணம் தொடர்பாக இருவரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் இதுவரை புகைப்படமோ, அதிகாரப்பூர்வ அறிவிப்போ வெளியிடவில்லை. இருப்பினும், வடகோவா பார்தேஸ் துணைப் பதிவாளர் சூரஜ் வெர்னேகர் இந்தத் திருமணம் குறித்து செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அர்ஜுன் ராம்பாலும் கேப்ரியெல்லாவும் 2018-ஆம் ஆண்டு பொதுவான நண்பர்கள் மூலம் முதன்முதலில் சந்தித்தனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது முதல் மனைவி மெஹ்ர் ஜெசியாவை விட்டு பிரிவதாக அர்ஜுன் ராம்பால் அறிவித்தார்.
அவர்களது விவாகரத்து 2019-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக நிறைவடைந்தது.திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த அர்ஜுன் ராம்பால்-கேப்ரியெல்லா தம்பதிக்கு, ஜூலை 2019-ல் அரிக் என்ற மகனும், ஜூலை 2023-ல் அரிவ் என்ற மற்றொரு மகனும் பிறந்தனர்.அர்ஜுன் ராம்பாலின் முதல் திருமணத்தின் மூலம் மஹிகா மற்றும் மைரா என இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் கேப்ரியெல்லாவுடன் நெருக்கமான நட்புறவில் இருப்பதாக கூறப்படுகிறது.கடந்த டிசம்பர் 2025-ல் நடிகை ரியா சக்ரவர்த்தி தொகுத்த போட்காஸ்ட் நிகழ்ச்சியில் அர்ஜுன் ராம்பாலும் கேப்ரியெல்லாவும் பங்கேற்றனர். அப்போது, தாங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் கேப்ரியெல்லா தெரிவித்திருந்தார். அதற்கு இடையில் பேசிய அர்ஜுன் ராம்பால், இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்தார்.நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு சில மாதங்களிலேயே, தற்போது ஆகஸ்ட் மாதத்தில் தங்களது 8 ஆண்டுகால காதல் உறவை திருமணத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்களது திருமணச் செய்தி பாலிவுட் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் வாழ்த்துகளைப் பெற்று வருகிறது.