ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கு தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் வீரமணி உள்ளிட்ட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்கள் எவ்வளவு செல்வாக்கு கொண்டவர்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வீரமணிக்கு எதிராக இதுவரை 15-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல்-அமைச்சரின் உத்தரவையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதுடன், வழக்கை விசாரிக்க 4 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி புகார் அளிக்க ஏதுவாக எஸ்.ஐ.டி. சார்பில் 9345319676 என்ற பிரத்யேக செல்போன் எண் அறிவிக்கப்பட்டது.
Advertisement
இந்த எண்ணில் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் வீரமணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்காக அவர் சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முந்தைய விசாரணையின்போது காணொலி காட்சி மூலம் வீரமணியிடம் நீதிபதி விசாரணை நடத்தியிருந்தார். தொடர்ந்து, இன்று நடைபெற்ற விசாரணையின்போது வீரமணியை நீதிபதி பத்மா முன்னிலையில் போலீசார் நேரில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெம் வீரமணியை வரும் 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே, வீரமணியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதி தெரிவித்ததையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.