தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா, அடுத்த மாதம் அக்டோபர் 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் 10-ம் திருநாளான அக்டோபர் 20-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. தசரா திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம். குறிப்பாக காளி வேடம் அணியும் பக்தர்கள் 61, 41, 21 மற்றும் 11 நாட்கள் என தங்களின் விருப்பத்திற்கேற்ப விரதம் மேற்கொள்கின்றனர். விரதத்தை தொடங்கும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி, துளசிமாலை வாங்கி கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அணிந்து கொள்கின்றனர். பிற ஊர்களில் விரதம் மேற்கொள்பவர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் பிறை அமைத்து தங்கி வழிபாடு செய்கின்றனர். குலசேகரன்பட்டினம் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்ற பின்னர், விரதம் இருக்கும் பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்டு தங்களுக்கான வேடங்களை அணிகின்றனர்.
Advertisement
இதையொட்டி உடன்குடி பஜார் கடைகளில் தசரா வேடம் அணிவதற்கான அலங்காரப் பொருட்களின் விற்பனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல்லை டவுன் பகுதிகளில் உள்ள கடைகளிலும் வேடப்பொருட்கள் விற்பனைக்காக அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. காளி வேடம் அணிய விரும்பும் பக்தர்கள் நீண்ட சடைமுடி, கிரீடம், சூலாயுதம், கண்மலர் உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் சிவன், பார்வதி, விநாயகர், முருகப்பெருமான், அனுமன், நாராயணர், ராமர், லட்சுமணர் உள்ளிட்ட வேடங்களை அணியும் பக்தர்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும், சில பக்தர்கள் தங்களுக்கு தேவையான வேடப்பொருட்களை பிரத்யேகமாக தயாரித்து தருமாறு கடைகளில் முன்பதிவு செய்து செல்கின்றனர். காளி வேடத்திற்கான பொருட்கள், அதன் வகை மற்றும் தேவையான அலங்காரங்களைப் பொறுத்து, மொத்தமாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.