ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையில் 5 பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டனர். அவர்களை தடுத்து விசாரித்தபோது, தங்கக்கட்டிகள், நகைகள் மற்றும் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்களிடம் 3.8 கிலோ தங்கக்கட்டிகள், 227 கிராம் தங்க நகைகள் மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது, இந்த தங்கக்கட்டிகள், நகைகள் மற்றும் பணம் ஆகியவை குப்பையில் கிடைத்ததாக 5 பேரும் தெரிவித்துள்ளனர்.
Advertisement
இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். எனினும், சண்டையிட்டுக் கொண்டிருந்த 5 பேரும் கைது செய்யப்படவில்லை. குப்பையில் தங்கக்கட்டிகள் மற்றும் பணம் கிடந்ததன் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தங்கக் கடத்தல் தொடர்பாக அவை குப்பையில் வீசப்பட்டனவா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. குப்பையில் 3.8 கிலோ தங்கக்கட்டிகள், நகைகள் மற்றும் பணம் கிடந்ததாக வெளியான தகவல் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.